விழுப்புரத்தில்சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணிகலெக்டர் ஆய்வு
விழுப்புரம் நகர சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.
விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் தாமரைக்குளம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. அதனை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணியை நேற்று மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் குழாயில் ஏற்பட்ட நீர்கசிவின் காரணமாக மண்ணின் கெட்டித்தன்மை பாதிக்கப்பட்டு ஈரமானதால் அந்த தண்ணீர், சாலையின் மேற்பகுதியில் வந்த வண்ணம் இருந்தது. இதன் காரணத்தாலும் மண்ணின் மிருதுத்தன்மை காரணமாகவும் கனரக வாகனங்கள் செல்லும்போது வாகனத்தின் எடை தாங்காமல் சாலை புதைந்து உள்வாங்கியது. பள்ளம் ஏற்பட்ட சாலையை செப்பனிடுவதற்காக பொக்லைன் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு பள்ளத்தில் இருந்த தண்ணீரை மின் மோட்டார் மற்றும் மின் உறிஞ்சு குழாய்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் குழாயை சீரமைத்த பின்னர் சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்படாத வகையில் வலுவான கட்டமைப்புகளை கொண்டு தரமான முறையில் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி சார்பில் பொது போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலைப்பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆய்வின்போது நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, பொறியாளர் ஜோதிமணி உள்பட பலர் உடனிருந்தனர்.