போடி அருகே வளர்ச்சி திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
போடி அருகே ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
போடி அருகே மஞ்சிநாயக்கன்பட்டி, அணைக்கரைப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மஞ்சிநாயக்கன்பட்டியில் சிமெண்டு சாலை மற்றும் வடிகால் அமைத்தல், சமுதாய கழிப்பறை அமைத்தல், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டுதல், சிறுபாலம் அமைத்தல் போன்ற பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
பின்னர், அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுமான பணி, போடி வலசதுறை சாலை முதல் அத்தியூத்து இடையிலான உயர்மட்ட பாலம் கட்டுமான பணி ஆகியவற்றை பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி உதவி பொறியாளர் மகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.