வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
திருவாடானை யூனியனில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொண்டி,
திருவாடானை யூனியனில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
திருவாடானை யூனியனில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு செய்தார். இதையொட்டி பெரிய கீரமங்கலம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.47.06 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை வணிகவளாக கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டார். திருவாடானை அரசு தாலுகா மருத்துவமனை வளாகத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணர்வு முகாமில் கலெக்டர் கலந்து கொண்டார்.
அங்கு கலெக்டர் தலைமையில் பொதுமக்கள், மகளிர் குழுவினர், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் நம்ம ஊரு சூப்பரு திட்ட உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து அவர் தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
நம்மஊரு சூப்பரு உறுதிமொழி
இதையடுத்து திருவாடானை சமத்துவபுரத்தில் 90 புதிய வீடுகள் கட்டுமான பணிகள், வீடுகள் பராமரிப்பு பணி, பாண்டுகுடி ஊராட்சி, தினையத்தூர் கிராமத்தில் 15-வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகளை பார்வையிட்டார். கலியநகரி ஊராட்சியில், "நம்ம ஊரு சூப்பரு" விழிப்புணர்வு குறித்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
தொடர்ந்து வேளாண்மை துறையின் மூலம் பிரதம மந்திரி விவசாய நீர் பாசன திட்டத்தின் கீழ் முழு மானியத்தில் தார்ப்பாய், பவர் ஸ்பேரயர், கை ஸ்பேரயர் 20 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் புல்லக் கடம்பன் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதிஅளிப்பு திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி செயலர் ரகு வீர கணபதி, திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார், திருவாடானை தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஒடவயல் ராஜாராம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரிய கீரமங்கலம் சரளாதேவி ரெத்தினமூர்த்தி, திருவாடானை இலக்கியாராமு, கலிய நகரிஉம்மூ சலீமா நூருல் அமீன், புல்லக் கடம்பன் மாதவி கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.