உயிர் உர உற்பத்தி மையத்தில் கலெக்டர் ஆய்வு
கடலூர் உயிர் உர உற்பத்தி மையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் செம்மண்டலத்தில் உயிர் உர உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது உயிர் உரம் உற்பத்தி செய்யும் வழிமுறைகளை அங்கிருந்த வேளாண்மை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கடலூர் உயிர் உர உற்பத்தி மையத்தில் தயாரிக்கும் திரவ உயிர் உரங்களின் வகைகள், அவற்றின் செயல்திறன் மற்றும் பயறுவகை தாவர குடும்ப பயிர்களில் வேர் முடிச்சுகளில் நன்மை செய்யும் ரைசோபியம், பாக்டீரியாக்கள், வளி மண்டல தழைச்சத்தினை கிரகித்து மண்ணில் நிலை நிறுத்தி நில வளத்தை பெருக்குதல், மணிச்சத்து உரத்தை கரைத்து பயிறுக்கு அளிக்கும் பாஸ்போ பாக்டீரியா ஆகியன குறித்து கேட்டறிந்தார்.
திட்டத்தின் நன்மைகள்
தொடர்ந்து உற்பத்திக்கு பயன்படும் உபகரணங்களின் பயன்பாடு குறித்து, ஆய்வக மூத்த வேளாண்மை அலுவலர் ஞானசேகர் விளக்கி கூறினார். அப்போது கலெக்டர், பயனுள்ள திட்டத்தின் நன்மைகள் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையினர் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
அப்போது வேளாண்மை இணை இயக்குனர் கண்ணைய்யா, வேளாண்மை துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயக்குமார், வேளாண்மை துணை இயக்குனர்கள் (நீர்வடி முகமை) ரவிச்சந்திரன், (பூச்சிக்கொல்லி ஆய்வகம்) உலகம்மை முருகக்கனி, வேளாண்மை உதவி இயக்குனர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) நடனசபாபதி, வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.