ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கலெக்டர் ஆய்வு
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்நோக்கு சேமிப்பு கிடங்கிற்கு சென்ற அவர் அங்கிருந்த விவசாய விளை பொருட்கள் தரமாக உள்ளதா? என பார்வையிட்டார். பின்னர் அவர், அங்கிருந்த விவசாயிகளிடம் விளைபொருட்களுக்கு உரிய பணம் உடனுக்குடன் வழங்கப்படுகிறதா?, உரிய விலை கிடைக்கிறதா?, வேறு ஏதேனும் குறைகள் உள்ளதா? என கேட்டறிந்தார். அப்போது விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கழிவறை, கேண்டீன் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் நாங்கள் பெரும் சிரமம் அடைந்து வருகிறோம் என்றனர்.
அதனை கேட்ட கலெக்டர் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முன்னதாக புதுக்கூரைப்பேட்டையில் நடைபெற்று வரும் கூட்டு குடிநீர் திட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சப்-கலெக்டர் பழனி, துணை தாசில்தார் சாந்தி, வருவாய் ஆய்வாளர் பிரேமா, கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், வேளாண்மை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.