உயர்மட்ட பாலங்கள் அமையவுள்ள இடங்களில் கலெக்டர் ஆய்வு


உயர்மட்ட பாலங்கள் அமையவுள்ள இடங்களில் கலெக்டர் ஆய்வு
x

திருச்சியில் மெட்ரோ திட்டத்துக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட உயர்மட்ட பாலங்கள் அமையவுள்ள இடங்களில் கலெக்டர் பிரதீப் குமார் ஆய்வு நடத்தினார்.

திருச்சி

மெட்ரோ ரெயில் திட்டம்

திருச்சியில் நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டது. சுமார் 68 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதனால் திருச்சியில் சத்திரம் பஸ்நிலையம் முதல் ஜங்ஷன் வரை, சிந்தாமணி அண்ணா சிலை முதல் குடமுருட்டி வரை, தலைமை தபால்நிலையம் முதல் கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை வரை என 3 இடங்களில் அமையவுள்ளதாக கூறப்பட்ட உயர்மட்ட மேம்பால பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

ஏற்கனவே உயர்மட்ட மேம்பாலத்துக்காக மண் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மெட்ரோ திட்டத்தை காரணம் காட்டி பாலம் தொடர்பாக அடுத்தக்கட்ட பணிகள் நிறுத்தப்பட்டன.

கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில் இந்த 3 பாலங்களால் மெட்ரோ திட்டத்துக்கு எந்தவித இடையூறும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது திருச்சியில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் கட்டப்பட உள்ள பாலங்களின் அமைவிடத்தை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரிஸ்டோ மேம்பாலம் அருகில் எம்.எஸ்.பி. கேம்ப் சாலையில் உள்ள பழமையான மற்றும் குறுகலான ரெயில்வே மேம்பாலத்துக்கு பதிலாக திருச்சி சந்திப்பு மற்றும் பூங்குடி ரெயில் நிலையங்களுக்கு இடையே புதிய சாலை மேம்பாலம் அமைப்பதற்கான இடத்தையும், திருச்சி மாநகரில் ஓடத்துறை காவிரி பாலம் முதல் அண்ணா சிலை மற்றும் கலைஞர் அறிவாலயம் வழியாக மல்லாச்சிபுரம் வரை உயர்மட்ட சாலை அமைப்பதற்கான வழித்தடத்தையும், சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மார்க்கெட், தலைமை தபால் நிலையம் வழியாக ரெயில்வே ஜங்ஷன் வரை செல்லும் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான வழித்தடத்தையும் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் புதிதாக பாலம் அமையவுள்ள இடத்தையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்கள் கேசவன் (கட்டிடம் மற்றும் பராமரிப்பு), முருகானந்தம் (திட்டங்கள்) மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story