நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
நன்னிலம் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரிக்கு நன்னிலம் மற்றும் நலமாகுடி, கம்மங்குடி, தூத்துக்குடி, சன்னாநல்லூர், சிகார் பாளையம், அச்சுதைமங்கலம், மாப்பிள்ளை குப்பம், ஸ்ரீவாஞ்சியம், கீழ்குடி, தென்னஞ்சார், பனங்குடி, ஆண்டிப்பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள், மகப்பேறு பகுதி, கண் மருத்துவமனை ஆகிய பிரிவுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளித்திடவும், ஆஸ்பத்திரி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து கடுவங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்றுவருவதையும்,
திருமீயச்சூர் ஊராட்சியில் ரூ.37.81 லட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டப்பட்டு வரும் பணியினையும், அந்த பகுதியில் ரூ.5.45 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் சிமெண்டு களத்தினையும் கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானகிருஷ்ண ரமேஷ், சிவக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.