பிளஸ்-1 தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு
பிளஸ்-1 தேர்வு மையத்தில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பிளஸ்-1 தேர்வு மையத்தில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-1 தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் மாணவ -மாணவிகள் தேர்வு எழுதுவதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாற்றுத்திறனாளி மாணவ -மாணவிகள் உதவியாளர்கள் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதுவதையும் கலெக்டர் வளர்மதி பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், ''இத்தேர்விற்காக 6 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 63 தேர்வு மையங்களும் உரிய காவல்துறை பாதுகாப்புடன் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 5 ஆயிரத்து 972 மாணவர்களும், 6 ஆயிரத்து 880 மாணவிகளும், 164 தனித்தேர்வர்களும் என மொத்தம் 13 ஆயிரத்து 16 பேர் தேர்வெழுதுகின்றனர்.
தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் என 131 தலைமையாசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களும், தேர்வறைக் கண்காணிப்பாளர்களாக 652 ஆசிரியர்களும் நிலையானபடை மற்றும் பறக்கும்படை உறுப்பினர்களாக 96 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு தேர்வு நடைபெறுவதை கண்காணித்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுதுவதற்கு 130 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையங்கள் அனைத்திற்கும் காவல்துறை கண்காணிப்பிற்காக காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படுள்ளது.
தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு தேவையான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வெழுதுவதை கண்காணிக்க வருவாய்துறை அலுவலர்கள் பறக்கும் படையினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் அச்சமின்றி தேர்வெழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு மாவட்ட கல்வித்துறை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.