அரசு விடுதியில் கலெக்டர் ஆய்வு
ஏலகிரி மலையில் அரசு பள்ளி மற்றும் அரசு விடுதியில் ஆய்வு செய்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
உணவு பரிமாறினார்
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிமலை அத்தனாவூர் பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் தொடக்கப்பள்ளி மற்றும் மலைவாழ் மாணவர் விடுதியினை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்கு வழங்ககூடிய உணவு அரசின் வழிகாட்டுதலின்படி வழங்கப்படுகிறதா, துய்மையான முறையில் சமைக்கப்படுகிறதா என்பதை, பார்வையிட்டார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்குவதற்காக தயார்நிலையில் இருந்த மதிய உணவை மாணவர்களுக்கு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது அருந்தி இருந்த மாணவனிடம் உணவு சுவையாக உள்ளதா என கேட்டறிந்தார்.
கைவினை கலைஞர்கள்
அதன் பிறகு அத்தனாவூர் கிராம கூட்டுறவு சங்க கட்டிடத்தில் மலைவாழ் மக்கள் தாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் கைவினை கலைஞர்கள் பட்டியலில் சேர்த்தல் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மலைவாழ் மக்கள் கூட்டுறவு கொள்முதல் மற்றும் விற்பனை மேம்பாட்டு இணையத்தின் தென்னிந்திய மேலாளர் சுபஜித் தரப்தார், மலைவாழ் மக்கள் நலன் திட்ட அலுவலர் கலை, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணைத் தலைவர் அ.திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.