வீடுகள் கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு


வீடுகள் கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு
x

இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் வீடுகள் கட்டுமான பணியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர்

இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் வீடுகள் கட்டுமான பணியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

வேலூரை அடுத்த மேல்மொணவூரில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது சிமெண்டு கலவை, கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்தார். அங்குள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்ற அவர் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். சத்துணவு தரம் குறித்தும் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி மேல்மொணவூரில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் 220 வீடுகள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. 4 வீடுகள் ஒரு தொகுப்பாக, 55 தொகுப்புகள் கொண்ட வீடுகள் கட்டப்பட உள்ளது. மேலும் தெரு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் வீடுகள் கட்டப்படுகிறது. இந்த பணிகள் வருகிற பிப்ரவரி, மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. வாரம் ஒருமுறை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்காணிக்க உத்தரவு

அப்போது இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தை சேர்ந்த பெண்கள் சிலர் கலெக்டரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர். கட்டிடப்பணியின் போது எம் சாண்ட் மணல் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தனர். அப்போது அதிகாரிகள் சிமெண்டுக்கு ஏற்ற விகிதத்தில் மணல் சேர்க்கப்படுவதாக தெரிவித்தனர். பின்னர் கலெக்டர் உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து கண்காணிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட் ரமேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story