வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தாசில்தார் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் கோட்டாச்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்ள வந்த மதுரை கலெக்டர் அனிஷ் சேகர், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அனிஷ்சேகர் அங்கு தரை தளம் சேதமடைந்துள்ளதை விரைந்து சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் இ-சேவை மையத்தில் ஆய்வு செய்த போது பெறப்படும் கட்டணங்களை வங்கி பரிவர்த்தனைகள் மூலம் மட்டுமே பெறப்படுவதை தவிர்த்து பொதுமக்கள் ரொக்கமாக கட்டணத் தொகை வழங்கினாலும் சேவைகளை வழங்க உத்தரவிட்டார். உசிலம்பட்டி அருகே, சிக்கம்பட்டி கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ள பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டார். செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கருமாத்தூர் கிராமப் பகுதியில் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பெரியகட்டளை ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.