வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் ஆய்வு செய்தார்.
பரங்கிப்பேட்டை
சின்னகுமட்டி ஊராட்சி
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 4 ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் ஆய்வு செய்தார்.
முன்னதாக சின்னகுமட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வாய்க்கால் தூா்வாரும் பணிகளை பார்வையிட்ட கலெக்டர் நர்சரி கார்டன், தூர் வாராமல் உள்ள குளம், தனிநபர் நீர் உறிஞ்சும் தொட்டி, பசுமை வீடுகள் மற்றும் சில்லாங்குப்பம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தரமாக மேற்கொள்ள வேண்டும்
அப்போது, நடைபெற்று வரும் பணிகளை தரமாகவும் உரிய காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் மதுபாலன், புவனகிரி தாசில்தார் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கம், சதீஷ், சின்னகுமட்டி ஊராட்சி மன்ற தலைவர் கோமதிகல்யாணம், வட்டார ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற துணை தலைவர் காசிநாதன், ஊராட்சி செயலாளா் கவிதா மற்றும் ஊராட்சி வாா்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழு பெண்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து மஞ்சக்குழி, அனுவம்பட்டு, தில்லைவிடங்கன் ஆகிய ஊராட்சிகளில் நடந்து முடிந்த மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.