தனியார் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு
விழுப்புரத்தில் தனியார் பள்ளி வாகனங்களை கலெக்டர் பழனி ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழந்தைகளின் பாதுகாப்பு கருதி நிதானமாக வாகனங்களை இயக்கும்படி டிரைவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
விழுப்புரம்:
கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளின் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து நேற்று விழுப்புரம், திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டன.
இந்த வாகனங்களை மாவட்ட கலெக்டர் சி.பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றும் வாகனத்தினுள் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா, அவசரகால வழி உள்ளதா, முதலுதவி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதா, வாகனத்தின் கதவுகள், தாழ்ப்பாள்கள் சரியாக உள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு பள்ளி வாகன டிரைவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
486 வாகனங்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் 122 தனியார் பள்ளிகளில் உள்ள 486 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அரசு விதிகளுக்குட்பட்டு வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. வாகனங்கள் பழுதடைந்துள்ளதை கண்டறிந்து அதை சரிசெய்து மீண்டும் வாகன அனுமதி பெற்றுச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வட்டார போக்குவரத்துத்துறையின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே பள்ளி பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும். அனுமதி பெறாத வாகனங்கள் பள்ளியின் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது கண்டறிந்தால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், வாகன ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்படும்.
நிதானமாக இயக்க...
பள்ளிக்கு குழந்தைகள் வர 5 நிமிடமோ, 10 நிமிடமோ காலதாமதம் ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் நிதானமாக வாகனத்தை இயக்க வேண்டும். செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்கக்கூடாது. வாகனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இருக்கையின் அளவிற்கு மட்டுமே குழந்தைகளை ஏற்றிச்செல்ல வேண்டும்.
பள்ளி நிர்வாகத்தினர், வாகனங்களை அவ்வப்போது ஆய்வு செய்து தேவையான வாகனத்தை நல்ல நிலையில் இருக்கும் வகையில் வைத்து பயன்படுத்துவதுடன், குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி வாகனத்தில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். எந்த விபத்தும் அல்லாத மாவட்டமாக அமைய பள்ளி வாகன டிரைவர்களின் பணி சிறப்பாக தொடர்ந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவ முகாம்
தொடர்ந்து, தீயணைப்புத்துறையின் சார்பில் தீத்தடுப்பு தொடர்பான விளக்கவுரை மற்றும் செய்முறை விளக்கத்தை கலெக்டர் பார்வையிட்டார். மேலும் பள்ளி வாகன ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மோகன்ராஜ், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோவிந்தராஜ், ஸ்ரீதரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.