விருத்தாசலம் பகுதியில் நடைபெறும் சாலை மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு
விருத்தாசலம் பகுதியில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருத்தாசலம்,
சாலை மேம்பாட்டு பணிகள்
விருத்தாசலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கூரைப்பேட்டை- பெரியார் நகரை இணைக்கும் வகையில் சாலை பாதுகாப்பு மேம்பாட்டு திட்டம் 2020-21 கீழ் பல்லடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணி ரூ.27 கோடி செலவில் தொடங்கி கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. இதே போல பொன்னேரி பகுதியில் விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்ததால் விபத்தை தவிர்க்கும் வகையில் நான்கு வழி சந்திப்பாக மாற்றும் பணி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் செலவிலும், சித்தலூர் புறவழிச்சாலையில் நான்குவழி சந்திப்பில் ரவுண்டனா அமைக்கும் பணி ரூ. 1½ கோடி செலவிலும், கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இருந்து கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தம் வரை 500 மீட்டர் தூரத்திற்கு 11 மீட்டர் சாலையை 20 மீட்டராக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் ரூ. ஒரு கோடியே 10 லட்சம் செலவில் நடந்து வருகிறது.
விளம்பர பேனர்களை அகற்றியதால் பரபரப்பு
இந்த சாலை மேம்பாட்டு பணிகளை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாக மேற்கொள்ளவும், மழைக்காலத்திற்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
முன்னதாக பொன்னேரி புறவழிச்சாலையில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை உடனடியாக அகற்றுமாறு வருவாய்த் துறைக்கும், போலீசாருக்கும் கலெக்டா் உத்தரவிட்டார். இதையடுத்து பொன்னேரி புறவழிச் சாலையில் இருந்த பேனர்களை போலீசார் அகற்றினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பரந்தாமன், உதவி கோட்ட பொறியாளர் அறிவு களஞ்சியம், உதவி பொறியாளர் விவேகானந்தன், தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சரவணன் மற்றும் விருத்தாசலம் தாசில்தார் தனபதி, விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.