சாலை சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
சாலைப்பணிகள் ஆய்வு
குமரி மாவட்ட நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர் கூறியதாவது:-
தமிழக அரசின் ஆணைக்கிணங்க குமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கும் பணி, தார் சாலைகள் அமைக்கும் பணி, புதிய சாலைகள் அமைப்பது என பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக வேர்கிளம்பி பேரூராட்சிக்கு உட்பட்ட குளச்சல்-திருவட்டார் சாலை ரூ.1.22 கோடியில் தார் சாலை அமைக்கும் பணி, விராலிகாட்டுவிளை-வீட்டுக்குழி சாலை அமைக்கும் பணியை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கோரிக்கை
இந்த பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பொன்மனை-ஈஞ்சங்கோடு செல்லும் சாலையில் சுமார் 336 மீட்டர் சாலை பராமரிக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் நேற்று அந்த பகுதியை நேரில் ஆய்வு செய்ததோடு, திட்ட அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மற்றும் பொன்மனை பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.
ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன், உதவி கோட்ட பொறியாளர் தனேஷ் சேகர். உதவி இயக்குனர் விஜயா, பொன்மனை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ரீமோன் மனோதங்கராஜ், அரசு வக்கீல் ஜான்சன், பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.