வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஆய்வு
அடுக்கம்பாறை அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்தில் தனியார் நர்சரி பிரைமரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை, பள்ளி நிர்வாகம் மினி வேன் மூலம் அழைத்து வந்து மீண்டும் கொண்டு சென்று விடப்படுகிறது. அதன்படி நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் புறப்பட்டது. முதலில் நாய்க்கனேரி கிராமத்தில் சுமார் 7 மாணவர்கள் இறக்கி விடப்பட்டனர். மீதமுள்ள மாணவர்களை அவர்கள் பகுதியில் கொண்டு சென்று விட, மினி வேன் புறப்பட்டது.
அப்போது நாய்க்கனேரி கிராமத்தில் இருந்து, ஆற்காட்டான்குடிசை வழியாக சென்றபோது, எதிர் திசையில் லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது வேனை ஒட்டி வந்த டிரைவர் முருகன் (வயது 50), லாரியை கடக்க முயன்ற போது மினி வேன் நிலை தடுமாறி அருகில் இருந்த விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் மற்றும் டிரைவர் எந்தவித பாதிப்புமின்றி தப்பினர். இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.