வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஆய்வு
குடோனில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு குடோன் உள்ளது. இங்கு தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த கருவிகள் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 600 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதற்கான முன்னேற்பாடாக வாக்குப்பதிவு எந்திரங்கள் ஸ்கேன் செய்யப்பட வேண்டும். இந்தநிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று குடோன் திறக்கப்பட்டது. அப்போது கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து திருப்பத்தூருக்கு அனுப்பப்பட உள்ள எந்திரங்கள் ஸ்கேன் செய்யும் பணி நடந்தது.