செந்துறை பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
செந்துறை பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
செந்துறை அம்பேத்கர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அசாவீரன் குடிக்காடு ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தலா ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு காலை உணவு தயார் செய்வதற்காக கட்டப்பட்டு வரும் சமையலறை கட்டிட கட்டுமான பணியினையும், அதனருகில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டுமான பணியினையும், செந்துறை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ரூ.12.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரேஷன் கடை கட்டுமான பணியினையும், செந்துறை அண்ணா நகர் 5-வது தெருவில் 117 மீட்டர் நீளத்திற்கு ரூ.11.83 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகாலுடன் கூடிய சிமெண்டு சாலை பணியினையும் கலெக்டர் பார்வையிட்டார்.
பெரியக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டுமான பணியையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.39.95 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரியாக்குறிச்சி ஊராட்சி செயலக கட்டிட கட்டுமான பணியினையும் பார்வையிட்டு பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து மணக்குடையான் ஊராட்சியில் ரூ.18.29 லட்சம் மதிப்பீட்டில் மராக்குறிச்சி- ஆனைவாரி ஓடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையினை பார்வையிட்டு தடுப்பணையின் மூலம் பயன்பெறும் விவசாய நிலங்களின் பரப்பளவு, கட்டுமான பொருட்களின் தரம் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார். மணக்குடையான் ஊராட்சி, அங்கன்வாடி மையத்தினை ஆய்வு செய்து குழந்தைகள் வருகைப்பதிவேடு, உணவுப்பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். செந்துறை ஊராட்சியில் செயல்பட்டுவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேஷன் கடையினை பார்வையிட்டு பொருட்களின் இருப்பு விவரம், பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டதற்கான பதிவேடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இலக்குவன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.