வளர்ச்சி பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கரகதஅள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.39 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பேளாரஅள்ளி ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பிளாஸ்டிக்குகளை தூளாக்கும் பணிகளையும், பேளார அள்ளி காலனியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் தனிநபர் நீர் சேமிப்பு குழி அமைக்கப்பட்டுள்ளதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பேளாரஅள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கொரட்டேரி - குறுமர் குட்டை கால்வாயில் ரூ.19 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நீர் சேமிக்கும் மூழ்கு குழிகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தரமான உணவு
தொடர்ந்து பேளாரஅள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்டு இருந்த கலவை சாதம் மற்றும் முட்டை ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு அரசு பட்டியலிட்டுள்ளபடி, நாள்தோறும் தரமான உணவுகளை சமைத்து வழங்க வேண்டுமென சத்துணவு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், பேளாரஅள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வளாகத்தில் மரக்கன்றினை அவர் நட்டு வைத்தார்.
ஆய்வின் போது பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ரவி, உதவி பொறியாளர் தமிழ்மணி, ஒன்றிய பொறியாளர்கள் முருகேசன், அண்ணாதுரை, ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் கண்ணன், அய்யாவு, ஊராட்சி மன்றத்தலைர்கள் ராதா, சந்திரா, ராஜம்மாள் உட்பட பலர் உடன் இருந்தனர்.