உள்விளையாட்டரங்கம் கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு
கொட்டையூர் பகுதியில் உள் விளையாட்டரங்கம் அமைக்கும் பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.
ஜோலார்பேட்டை
ஏலகிரி மலை கொட்டையூர் பகுதியில் உள் விளையாட்டரங்கம் அமைக்கும் பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.
உள்விளையாட்டு அரங்கம்
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. 14 கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ளவர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு ஜோலார்பேட்டை ஒன்றியம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மேற் கொண்டு வருகிறது.
மேலும் இங்குள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு அரங்கம் கட்டிட ேவலைகள் நடைபெற்று வருகிறது.
ஆய்வு
இந்த நிலையில் கலெக்டர் அமர்குஷ்வாஹா, க.தேவராஜி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என் கே. ஆர்.சூரியகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொட்டையூர் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் உள் விளையாட்டு அரங்கம் கட்டிட பணி, மங்கலம் கூட்ரோடு பகுதியில் நடைபெற்று வரும் ரேஷன் சேமிப்பு கிடங்கு கட்டிட பணி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
மேலும் மங்கலம் பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு பயனாளிக்கு பணி ஆணை வழங்கினர்.
நிலாவூர் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் அரசு சார்பில் குறைந்த கட்டணத்தில் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள், யாத்ரி நிவாஸ் போன்று கட்டிடத்தை அமைக்கவும் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து ராயனேரி செல்லும் சாலையில் பழுதடைந்துள்ள சிறு பாலத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
விரைந்து முடிக்க உத்தரவு
தற்போது நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்கவும், செயல்படுத்தப்பட உள்ள பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டார். ஆய்வின் போது திட்ட இயக்குனர் கு.செல்வராசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், முருகேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் சிவப்பிரகாசம், லட்சுமி செந்தில் குமார், ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன், ஊராட்சி வார்டு உறுப்பினர் தனலட்சுமி சங்கர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.