குலசை தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்.. சாதிய சின்னம், கொடிகளுக்கு தடை
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு வரும் பக்தர்கள், குழுவினர் சாதிய சின்னம், கொடிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது,
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா தொடர்பாக கலெக்டர் லட்சுமிபதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தசரா திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் திறந்தவெளி வாகனங்களிலும், ஒலி பெருக்கி பொறுத்தப்பட்டுள்ள வாகனங்களிலும் வருவதற்கும் அனுமதி இல்லை. பொது போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் தற்காலிக கடைகள் அமைக்க அனுமதி கிடையாது. பக்தர்கள் வாகனங்களை வாகன நிறுத்தங்கள் தவிர சாலைகளிலோ, சாலை ஓரங்களிலோ, நிறுத்தக்கூடாது. கோவிலுக்கு வரும் தசரா குழுக்கள் கோவிலுக்குள் வந்து தரிசனம் செய்துவிட்டு வெளியே செல்வதற்காக தனிப் பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பாதைகள் வழியாகவே பக்தர்கள் வந்து செல்ல வேண்டும்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேல், சூலாயுதம், வாள் போன்ற உலோகத்திலான எந்த பொருட்களையும் கொண்டு வருதல் கூடாது. பக்தர்கள் கடவுள் சம்பந்தப்பட்ட படங்களை பக்தியோடு கொண்டு வருவதற்கோ அல்லது பயன்படுத்தவதற்கோ, பக்தி பாடல்களை இசைப்பதற்கோ, கடவுள் சம்பந்தப்பட்ட பனியன்கள் மற்றும் உடைகளை அணிந்து வருவதற்கோ எவ்வித தடையும் இல்லை.
சாதி அடையாளத்துக்கு தடை
ஆனால் சாதி சின்னங்களுடன் கூடிய கொடியோ, தொப்பி மற்றும் ரிப்பன்களையோ, சாதி ரீயான உடைகளை அணிந்து வரவோ, காவல்துறையினரைப் போன்று சீருடை அணிந்து வேடமிட்டு வரவோ தடை செய்யப்பட்டுள்ளது. அறுவறுக்க தக்க வகையில் நடந்துகொள்வதற்கோ, நடனம் ஆடுவதற்கோ, அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பி சுற்றுச் சூழலுக்கு பங்கம் ஏற்படுத்துவதற்கோ, சாதி சம்பந்தமான கோஷங்கள் மற்றும் இசை ஏற்படுத்துவதற்கோ எவ்வித அனுமதியும் கிடையாது.
மேலும், எந்தவித ஆடல் பாடல் நிகழ்ச்சிகளோ, ஆபாச நடனமோ நடத்தக் கூடாது, மீறினால் சம்பந்தப்பட்ட இசைக்குழுவினர் மற்றும் அமைப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தசரா குழுக்கள் முக்கிய சந்திப்புகளை கடக்கும் போது அவ்விடத்தில் அதிக நேரம் நிறுத்தி கொண்டு வாண வேடிக்கைகள் நடத்தவோ, நன்கொடை பெறவோ, இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தவோ கூடாது. பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு காப்பு கட்டியிருக்கும் பக்தர்கள் தங்கள் ஊர்களில் உள்ள கோவில்களிலேயே காப்பு கயிறுகளை அவிழ்த்து கொள்ளலாம்.
தீவிர கண்காணிப்பு
கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருதியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டும் மற்றும் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், வாகனங்கள் வரும் வழிப்பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள், தசரா குழுக்கள் வரும் வழி, பக்தர்கள் வரும் வழி, கோவில் வளாகம், கடற்கரை பகுதி, பக்தர்கள் வெளியே செல்லும் வழி ஆகிய அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து சீருடை அணிந்த மற்றும் சாதாரண உடையணிந்த ஆண், பெண் போலீசாரை நியமித்து தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனவே, அனைத்து பொதுமக்களும் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவை மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் நடத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.