மழைக்காலத்தில் நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை; கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் விசாகன் உத்தரவு
மழைக்காலத்தில் நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.
மழைக்காலத்தில் நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.
கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மழைக்கால நோய், டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் பூங்கோதை, அனிதா, வரதராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமர்நாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் விசாகன் பேசியதாவது:-
மழைக்காலத்தில் கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. அத்தகைய நோய்களின் அறிகுறிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் மழைநீர் தேங்கக்கூடிய பொருட்களை கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும்.
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை
மேலும் மருத்துவமனைக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறியோடு வரும் நபர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும். அதேபோல் மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளும் விவரங்களை தெரிவிக்க வேண்டும். கிராமங்களில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, டைபாய்டு மற்றும் தொற்றுநோய் பாதிப்பு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல் பிளாஸ்டிக் கழிவுகள், தேங்காய் சிரட்டைகள், டயர்கள் உள்ளிட்ட குப்பைகளை காலமுறை இடைவெளியில் அகற்ற வேண்டும். குப்பைகளில் மழைநீர் தேங்காமல் தடுக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களில் கழிவுநீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுஇடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க வேண்டும்.
குடிநீர் வினியோகம்
மேலும் கிணறு, டேங்கர் வாகனங்கள் மூலம் மக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரை குளோரின் கலந்த பின்னரே வழங்க வேண்டும். குடிநீர் தொட்டிகள், குழாய்களில் உடைப்பு, கசிவு இருந்தால் கொசுப்புழு உற்பத்தியாகி விடும் வாய்ப்பு உள்ளது. எனவே உடைப்பு, கசிவை உடனுக்குடன் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்க அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.