ஈரநில பகுதிகளை பாதுகாப்பதில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை


ஈரநில பகுதிகளை பாதுகாப்பதில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஈரநில பகுதிகளை பாதுகாப்பதில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

விழுப்புரம்

மரக்காணம் தாலுகா ஆத்திக்குப்பத்தில் ஈரநில தினத்தை முன்னிட்டு அங்குள்ள கழுவெளி பறவைகள் சரணாலயத்தை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரநிலங்கள் பூமியின் நுரையீரல்களாக கருதப்படுகிறது. எண்ணற்ற நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள் மற்றும் தாவர இனங்களை பாதுகாத்திடவும், பூமி வெப்பமயமாதல், நில நடுக்கம், பெருவெள்ளம் போன்றவற்றை கட்டுப்படுத்தவும் ஈரநிலங்களை பாதுகாப்பது அவசியமாகிறது.

ஈரநிலங்களை பாதுகாக்க...

மாநில மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் உருவாக்கப்பட்டு ஈரநிலங்களை அடையாளப்படுத்தி மீட்டெடுத்து பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாட்டின் நீர்வளம், பசுமை வளம் அதிகரிப்பதோடு இயற்கை பேரிடர்களிலிருந்து பூமியை பாதுகாத்திட முடியும்.

இந்தியாவில் 27,000 ச.கி.மீ. மேற்பட்ட அளவில் சதுப்பு நிலங்கள் உள்ளன. இதில் 4,000 ச.கி.மீ. கடற்கரை பரப்பளவில் அமைந்துள்ளன. இதனை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்பு உள்ள பகுதிகளை மீட்டெடுக்கும்பொருட்டும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2-ந் தேதி ஈரநில தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள், ஈரநில பகுதிகளை பாதுகாப்பதில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு அரசின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, ஈரநிலத்தை பாதுகாப்பது குறித்து ஈரநில நண்பர்கள் குழுவினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார். மேலும் பறவைகளை பாதுகாப்பது குறித்த நாள்காட்டியினை வெளியிட்டார்.

இந்நிகழ்வின்போது கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், வனச்சரக அலுவலர் அஸ்வினி உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story