சினிமா தியேட்டர்களில் கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு
விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியில் உள்ள சினிமா தியேட்டர்களில் கலெக்டர் மோகன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியில் உள்ள சினிமா தியேட்டர்களில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் சினிமா கட்டணம் குறித்து நேற்று மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சினிமா தியேட்டர்களில் உள்ள இருக்கை வசதிகள், சுகாதாரமான குடிநீர் வசதி, சுத்தமான கழிவறை வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம், தீத்தடுப்பு வசதி, அவசரகால வழி, சுகாதாரமான திண்பண்டங்கள் மற்றும் உணவுகள் விற்கப்படுகிறதா? அனுமதிக்கப்பட்ட கட்டணத்தொகை வசூலிக்கப்படுகிறதா? என்று பார்வையிட்டார். மேலும் திரைப்படத்தை பார்வையிட வருகைபுரிந்த பொதுமக்களிடம், தியேட்டர்களில் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா? திண்பண்டங்கள், குளிர்பானங்களின் விலை குறித்தும், திரைப்படம் பார்ப்பதற்கு வாங்கப்பட்ட டிக்கெட் விலையின் விவரம் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, தாசில்தார் ஆனந்தகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.