ஆசனூர் அருகே பழங்குடியின மலைவாழ் மக்களுக்கான சட்ட ஆலோசனை முகாம்; மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி- கலெக்டர் பங்கேற்பு


ஆசனூர் அருகே பழங்குடியின மலைவாழ் மக்களுக்கான சட்ட ஆலோசனை முகாம்; மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி- கலெக்டர் பங்கேற்பு
x

ஆசனூர் அருகே பழங்குடியின மலைவாழ் மக்களுக்கான சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது.

ஈரோடு

தாளவாடி

ஆசனூர் அருகே பழங்குடியின மலைவாழ் மக்களுக்கான சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது.

சட்ட ஆலோசனை முகாம்

தாளவாடியை அடுத்த ஆசனூர் அருகே உள்ள அரேபாளையம் மற்றும் கெத்தேசால் கிராமத்தில் பழங்குடியின மலைவாழ் மக்களுக்கான சிறப்பு சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி எஸ்.பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தார்.

இதில் கலந்து கொண்ட மனித உரிமைகள் ஆணையம் நீதிபதி எஸ்.பாஸ்கரன் கூறுகையில், 'மலைப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும். இங்குள்ள யாருக்காவது காய்ச்சல் மற்றும் தொடர் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகி டாக்டர்களின் வழிகாட்டுதலை முழுமையாக பின்பற்ற வேண்டும். பட்டா வேண்டியும், மாதாந்திர உதவித்தொகை வேண்டியும் மலைவாழ் மக்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பார். மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகத்துக்கு பாராட்டுக்கள்,' என்றார்.

மனு

இதைத்தொடர்ந்து மலைவாழ் மக்கள் நீதிபதி எஸ்.பாஸ்கரனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

சிறு வன மகசூலான சீமார் புல், கல்பாசம், தேன், நெல்லிக்காய் ஆகிய பொருட்களை சேகரிக்க அனுமதி வேண்டும். சேகரித்த பொருட்களை சேமித்து வைக்க சேமிப்பு கிடங்கு வேண்டும். கிராமங்களுக்கு தார் சாலைஅமைத்து கொடுக்க வேண்டும். யாகைள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதம் செய்யாமல் தடுக்க அகழி, மின்சார கம்பி வேலி அமைக்க வேண்டும். கிராமத்துக்கு காலை, மாலை என இரு வேளையும் பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறுகையில், 'மக்களின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுசசிமோகன், மாவட்ட வன அலுவலர் கிருபா சங்கர், நீதிபதி. இரா.பரஞ்சோதி (பணி நிறைவு), தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சட்ட ஆலோசகர் வீரசேகரன், கோபிசெட்டிபாளையம் மனிதம் சட்ட உதவி மையம் மு.சென்னியப்பன் மற்றும் மலைவாழ் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story