வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் உண்ணிச்செடி குச்சியில் இருந்து எரி கட்டிகள் செய்யும் திட்டம்- லாபம் சம்பாதிக்கும் மலைக்கிராம தொழில்குழு
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உண்ணிச்செடி குச்சியில் இருந்து எரிகட்டி செய்யும் திட்டத்தில் மலைக்கிராம தொழில்குழு லாபம் சம்பாதித்து வருகிறது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உண்ணிச்செடி குச்சியில் இருந்து எரிகட்டி செய்யும் திட்டத்தில் மலைக்கிராம தொழில்குழு லாபம் சம்பாதித்து வருகிறது.
வாழ்ந்து காட்டுவோம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைக்கு உள்பட்ட ஆசனூர் கிராமத்தில் ஆசனூர் லேண்டனா (உண்ணிச்செடி) தொழில் குழு இயங்கி வருகிறது. இந்த குழுவில் ஆசனூர், கேர்மாளம், கானக்கரை பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் 30 பேருடன் இந்த குழு இயங்கி வருகிறது. தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் மலைக்கிராம மக்களும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி மலைவாழ் மக்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்தி வருவதால், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் வெற்றி பெற தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகிறார். முதல் கட்டமாக மலைக்கிராமங்கள், காட்டு பகுதியில் வளர்ந்து களைச்செடியாக கிடக்கும் உண்ணிச்செடிகளில் இருந்து பர்னிச்சர் தயாரிப்பு என்ற புதிய முயற்சி எடுக்கப்பட்டது. இதற்காக சிறப்பு தொழில்நுட்ப பணியாளர்கள் மூலம் உண்ணிச்செடி குச்சியில் இருந்து இருக்கைகள், மேஜைகள், அலங்கார பொருட்கள் தயாரிக்கப்பட்டன. இந்த பொருட்களை சந்தைப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உண்ணிச்செடியில் எரிகட்டி
இந்தநிலையில் வளர்ந்து வரும் உண்ணிச்செடிகளை விரைவாக அகற்றவும், அப்படி அகற்றப்படும் உண்ணிச்செடி குச்சிகளை மலைவாழ் மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்தும் வகையிலும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் புத்தாக்க நிதியின் கீழ் ரூ.16 லட்சம் ஒதுக்கப்பட்டது. தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியின் அறிவுரையின் பேரில், மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி வழிகாட்டுதலுடன், ஆசனூர் லேண்டனா தொழில் குழு மூலம் உண்ணிச்செடியின் குச்சிகளில் இருந்து எரி கட்டிகள் உற்பத்தி செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், உண்ணிச்செடி குச்சிகள் சேகரிக்க டிராக்டர், அதற்கான டிரைலர் மற்றும் தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டன.
உண்ணிச்செடி குச்சிகளை சேகரித்த பிறகு எரி கட்டியாக மாற்ற அவற்றை அரைப்பது உள்பட மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி பெற்ற தொழில் குழுவினர் குறுகிய காலத்திலேயே 7½ டன் எடை அளவுக்கு எரிகட்டிகள் உற்பத்தி செய்து விற்று உள்ளனர். இதன் மூலம் ஒரு மாதத்தில் இந்த குழுவினர் ரூ.35 ஆயிரம் வரை லாபம் ஈட்டி இருக்கிறார்கள்.
பயிற்சி
இதுகுறித்து கானக்கரை மலை கிராமத்தை சேர்ந்த சிவசாமி கூறியதாவது:-
நான் ஆசனூர் லேண்டனா தொழில் குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். கல்வி அறிவு இல்லாத நான் மலைப்பகுதியில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்தேன். இந்தநிலையில் லேண்டனா தொழில் குழுவில் என்னை இணைத்து உண்ணிச்செடி குச்சிகளில் பர்னிச்சர் செய்ய பயிற்சி அளித்தனர். அந்த தொழிலில் ஈடுபட்டு வந்த நேரத்தில் கூடுதல் வருவாய்க்காக எரிகட்டிகள் செய்யும் பயிற்சியும், அதற்கான உபகரணங்களும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் அளிக்கப்பட்டது.
இப்போது எங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் தினசரி வேலையும், தொடர் வருமானமும் உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றி எங்கள் பொருளாதார வாழ்வை மேம்படுத்தி வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
லாபம் கிடைக்கிறது
இதே பகுதியை சேர்ந்த லட்சுமி கூறியதாவது:-
எனது கணவர் மலைப்பகுதியில் கிடைக்கும் தேன், தினை, மூங்கில் அரிசி உள்ளிட்டவற்றை சேகரித்து வருவார். அதை விற்று கிடைக்கும் குறைந்த வருவாயில் குடும்பத்தை ஓட்டி வந்தேன். ஏதேனும் வேலைக்கு செல்லலாம் என்றால் எனக்கு கல்வி அறிவு கிடையாது. இந்த சூழலில் ஆசனூர் லேண்டனா தொழில் குழுவில் என்னை சேர்த்து, உண்ணிச்செடி பர்னிச்சர் செய்யும் பயிற்சி அளித்தனர். இதனால் எனக்கு ஒரு வேலை கிடைத்தது. ஆனால் போதிய வருவாய் கிடைக்கவில்லை. தற்போது உண்ணிச்செடி குச்சியில் இருந்து எரிகட்டிகள் உருவாக்கி விற்பனை செய்ய தொடங்கிய பிறகு, தொழில் குழுவுக்கு லாபம் கிடைக்கிறது. அதில் இருந்து எங்களுக்கும் வருவாய் வழங்கப்படுகிறது. இனிமேல் தொடர்ச்சியாக வேலையும், வருமானமும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.