பூர்த்தி செய்யாத படிவத்தில் முத்திரையிட்ட சம்பவம்; கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனருக்கு கலெக்டர் நோட்டீஸ்
கடன் வழங்கும் முகாமில் பூர்த்தி செய்யாத படிவத்தில் முத்திரை மற்றும் கையொப்பமிட்டு வழங்கியது தொடர்பாக, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனரிடம் விளக்கம் கேட்டு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பினார்.
கடன் வழங்கும் முகாமில் பூர்த்தி செய்யாத படிவத்தில் முத்திரை மற்றும் கையொப்பமிட்டு வழங்கியது தொடர்பாக, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனரிடம் விளக்கம் கேட்டு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பினார்.
டாக்டர் முத்திரை
தாட்கோ மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு கால்நடைகள் வளர்ப்புக்கான கடன் வழங்குவது தொடர்பான விண்ணப்பங்கள் பெறும் முகாம் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 25-ந்தேதி நடந்தது.
அப்போது தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர், அரசு கால்நடை டாக்டரின் முத்திரை, கையொப்பமிட்ட படிவங்களை விண்ணப்பிக்க வந்த மக்களிடம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வினியோகம் செய்தார். அந்த படிவத்தை அவர் விற்பனை செய்ததாகவும் புகார் கூறப்பட்டது.
பூர்த்தி செய்யப்படாமல் இருந்த அந்த படிவங்களில், கால்நடை டாக்டரின் கையெழுத்து மற்றும் முத்திரை இடம் பெற்றிருந்தது. அந்த படிவங்களை கைப்பற்றிய சிலர், அதனை மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் ஒப்படைத்தனர்.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
இதுகுறித்து உடனடியாக கலெக்டர் விசாரணை நடத்தி, முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக கலெக்டர் விசாரணை நடத்தினார். விசாரணையில் விண்ணப்ப படிவத்தில் இடம் பெற்றிருந்த முத்திரை மற்றும் கையொப்பம், தேனி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) அன்பழகனின் பெயரில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இணை இயக்குனர் அன்பழகனிடம், இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு கலெக்டர் ஷஜீவனா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பூர்த்தி செய்யப்படாத படிவத்தில் முத்திரை மற்றும் கையொப்பமிட்டு தொண்டு நிறுவனத்தின் பெயரில் வந்த நபரிடம் வழங்கியது ஏன்? என்பது குறித்து அவர் அளிக்கும் விளக்கத்தை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.