கலெக்டர் அலுவலகத்தில் விரைவில் முற்றுகை போராட்டம்
கலெக்டர் அலுவலகத்தில் விரைவில் முற்றுகை போராட்டம்
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் பள்ளிவாசல்களில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கக்கோரி
கலெக்டர் அலுவலகத்தில் விரைவில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு தலைவர் இப்ராகிம் கலீல் பேட்டியின் போது கூறினார்.
பள்ளிவாசல்களில் வழிபாடு
திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் பள்ளிவாசல்களில் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும், அனுமதி வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு தலைவர் இப்ராகிம் கலீல் நேற்று திருப்பூரில் உள்ள அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பூர் 15 வேலம்பாளையம் பள்ளிவாசலை சுற்றி 75-க்கும் மேற்பட்ட வழிபாட்டு தலங்கள் உள்ளது. ஒரு சில நபர்கள் அரசியல் ஆதாயத்திற்காக 15 வேலம்பாளையம் பள்ளிவாசலை மூடக்கோரி வழக்கு தொடர்ந்தனர். இதில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு பள்ளிவாசலை நடத்த வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.
முற்றுகையிட்டு போராட்டம்
இதற்காக அனுமதி பெறக்கோரி பலமுறை மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கிறார்கள். பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். இதனை கண்டித்தும், 15 வேலம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி வழங்கக்கோரி விரைவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்ட பொதுச்செயலாளர் யாசர் அராபத், பொருளாளர் தஸ்தகீர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் முத்து முஸ்தபா, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் நசீர் தீன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அபுசாலிக், திருப்பூர் வட்டார ஜமாத் உலமா மாவட்ட தலைவர் நாசர் சிராஜ், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் பசீர் அகமது உள்பட பலர் உடன் இருந்தனர்.