இடையில் நின்ற மாணவர்கள் படிப்பை தொடர ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்


இடையில் நின்ற மாணவர்கள் படிப்பை தொடர ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இடையில் நின்ற மாணவர்கள் படிப்பை தொடர ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டார்.

ராமநாதபுரம்

இடையில் நின்ற மாணவர்கள் படிப்பை தொடர ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டார்.

ஆய்வு கூட்டம்

ராமநாதபுரத்தில் பள்ளி கல்வித்துறை செயல்பாடு குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:- ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் மாணவர்கள் படிப்பை தொடராமல் இடையில் நின்று விடுகிறார்களா என்பதை கண்காணித்து, அவ்வாறு இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து அந்த மாணவரின் படிப்பை தொடர உறுதுணையாக இருக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் தடையின்றி உயர்கல்வி வரை படிக்க தேவையான அனைத்து திட்டங்களையும் அரசு வழங்கி வருகிறது. மாணவர் இடைநிற்றலை தவிர்க்க உண்டு உறைவிடப்பள்ளிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகிறது. அனைத்து அரசு பள்ளிகளிலும் துவக்கத்தில் வருகை தந்த மாணவ, மாணவிகள் முழுஆண்டு தேர்வு முடியும் வரை வருகை தருவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

உறுதுணையாக

பள்ளிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை தேவைக்கேற்ப விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற பழைய கட்டிடங்கள் இருந்தால் உடனடியாக அகற்றிட வேண்டும். குறிப்பாக குடிநீர் வசதி, கழிப்பறை கட்டிடங்கள் போதிய அளவு இருக்க வேண்டும். மாணவ, மாணவிகளிடம் தேர்வு அச்சத்தை போக்கி அவர்களை ஊக்கப்படுத்தி தேர்வுகளை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

பெற்றோர்களும் பிள்ளைகளின் மனநிலையை உணர்ந்து அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவீதம் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த வேண்டும். மாணவ, மாணவிகளின் கல்விக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் சுதாகர், பிரின்ஸ், முருகவேல், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேசன் பாண்டியன், ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story