கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்ப பதிவிற்கான டோக்கன் வீடு, வீடாக வழங்கும் பணி கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்


கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்ப பதிவிற்கான டோக்கன் வீடு, வீடாக வழங்கும் பணி கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 July 2023 12:15 AM IST (Updated: 21 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்ப பதிவிற்கான டோக்கனை வீடு, வீடாக வழங்கும் பணியை கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்

தமிழ்நாடு அரசின் சார்பில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதோடு இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் வகையில் விண்ணப்பத்தை, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் முகாம் நடைபெறுவதற்கு முன்பாகவே வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி வரையும், 2-ம் கட்ட முகாம் 5.8.2023 முதல் 16.8.2023 வரையும் நடைபெறவுள்ளது.

டோக்கன் வழங்கும் பணி

இதையொட்டி மாவட்டம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர் மூலம் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று டோக்கன் வழங்கும் பணிகள் நேற்று முதல் தொடங்கியது. விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 24-ல் உள்ள ரங்கநாதன் சாலை, வார்டு எண் 2-ல் உள்ள கைவல்லிய தெரு மற்றும் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் சத்திப்பட்டு ஊராட்சி ஒருகோடி கிராமம் ஆகிய இடங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணியை மாவட்ட கலெக்டர் பழனி தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி, விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, தாசில்தார் வேல்முருகன், குடிமைப்பொருள் தனி தாசில்தார் தயாளன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story