மாங்குடி மருதனார் நினைவுத்தூணுக்கு கலெக்டர் மலர் தூவி மரியாதை
செங்கோட்டை அருகே மாங்குடி மருதனார் நினைவுத்தூணுக்கு கலெக்டர் துரை ரவிச்சந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே மாங்குடியில் பிறந்தவர் சங்ககாலப் புலவர் மாங்குடி மருதனார். பத்துப்பாட்டில் இவர் எழுதிய மதுரைக்காஞ்சி பாடல் பண்டைய கால மதுரையின் வளமையை, வணிகத்தை விவரித்து போற்றுகிறது. இந்த நிலையில் தென்காசி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 132-வது பிறந்தநாளான நேற்று மாங்குடியில் தமிழ் கவிஞர் நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாங்குடியில் உள்ள சங்கப்புலவர் மாங்குடி மருதனார் நினைவு தூணுக்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உதவி கலெக்டர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். தொடர்ந்து கலெக்டர், 2001-2002-ம் ஆண்டில் இப்பகுதியில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்த நுண்கற்கால கருவிகள், யானை தந்த படிமங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் இலக்கிய விழாவை தொடக்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் மாங்குடி மருதனார் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் குறித்து சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சங்கர்ராம், ஆசிரியர் பூமாரி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நகர செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, வக்கீல் ரவீந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெரியநாயகம், மருதனார் தமிழ் மன்ற செயலாளர் மலைக்கனி ஆகியோர் பேசினர். முன்னதாக மண்டல தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் சுந்தர் வரவேற்றார். முடிவில் உதவி இயக்குனர் ரெசினாள் மேரி நன்றி கூறினார். விழாவில் அரசு அதிகாரிகள், இலக்கியவாதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.