பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு


பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து குமரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து குமரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார்.

சாலை பாதுகாப்பு

நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடம், முப்பந்தல், கண்ணுப்பொத்தை ஆகிய பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது வெள்ளமடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சுசீந்திரத்திற்கு செல்லும் கிளை சாலை, ஆரல்வாய்மொழி சந்திப்பில் இருந்து தேவசகாயம் மவுண்ட் சந்திப்பு செல்லும் சாலை, முப்பந்தல் கண்ணுப்பொத்தை 4 வழி சாலை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகம் அருகிலுள்ள சாலையில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆசோசனை நடத்தினார்.

கடுமையான நடவடிக்கை

இந்த ஆய்வின்போது முக்கிய சாலைகளில் மின்விளக்குகள், எச்சரிக்கை பலகைகள், எச்சரிக்கை அடையாள குறிகள், தகவல் தெரிவிப்பு அடையாள குறிகள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுடன் கலெக்டர் ஸ்ரீதர் கூறினார். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது, நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது குறித்து அறிவிப்பு பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என போலீசாரிடம் தெரிவித்தார்.

ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் வேல்ராஜ், நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், தோவாளை தாசில்தார் வினைத்தீர்த்தன், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.


Next Story