ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு
கடலூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் அருகே வெள்ளக்கரையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று காலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்தார். தொடர்ந்து புறநோயாளிகள் பிரிவு, மருந்தகம், ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், அங்கு சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் பயன் படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்தும், மருந்தகங்களில் தேவையான மருந்துகள் இருப்பு உள்ளனவா என்பதையும் கலெக்டர் பாலசுப்பிரமணியம் கேட்டறிந்தார். இதையடுத்து மருத்துவமனை வளாகங்களுக்குள் நோய் பரவா வண்ணம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, தூய்மையாக பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என அங்கிருந்த ஊழியர்களை அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து ராமாபுரத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கும் சென்று கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா மற்றும் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.