சிறுபான்மையினருக்கான கடன் திட்டங்களில் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்
சிறுபான்மையினருக்கான கடன் திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் கவிதா ராமு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடன் திட்டங்கள்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம்-1ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதமும், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.
கல்வி நிலையங்கள்
கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம், ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1½ லட்சம் கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மை மாணவ-மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீதம் வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30 லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்கள்
எனவே, மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம் முதல் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.