பள்ளி வாகனங்களை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு
தூத்துக்குடியில் பள்ளி வாகனங்களை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் பள்ளி வாகனங்களை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்திற்கு வரவழைக்கப்பட்ட பள்ளி வாகனங்களை நேற்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். அப்போது, பள்ளி வாகனங்களின் படிக்கட்டு, இருக்கைகள், அவசரகால வழி, முதலுதவி மருந்துகள், தீயணைப்பு கருவி ஆகியவை சரியான முறையில் உள்ளதா? என்றும், வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார். மேலும் பள்ளி வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
வழக்கமான ஒன்று
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கல்வி ஆண்டை தொடங்குவதற்கு முன்னால் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்வது வழக்கமான ஒரு நிகழ்வாகும். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்துள்ளேன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 கோட்டங்கள் உள்ளன. தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி இந்த 3 கோட்டங்களிலும் வட்டார போக்குவரத்து அலுவலர், சார் ஆட்சியர் அல்லது கோட்டாட்சியர், அதைப்போல துணை போலீஸ் சூப்பிரண்டு 3 பேர் இணைந்து வாகனங்களை ஆய்வு செய்கின்றனர். தூத்துக்குடியில் 169, திருச்செந்தூரில் 200, கோவில்பட்டியில் 269 வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் வாகனத்தில் படிக்கட்டுகள் சரியாக உள்ளதா, அவசர வழி சரியாக உள்ளதா, கண்காணிப்பு கேமரா, வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளதா, முதலுதவி பெட்டி, மாத்திரைகள் சரியாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆய்வில் உதவி கலெக்டர் கவுரவ் குமார், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ், தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.