தடுப்பணைகளில் கலெக்டர் செந்தில்ராஜ் திடீர் ஆய்வு
ஆழ்வார்திருநகரி, குரங்கணி தடுப்பணைகளில் கலெக்டர் செந்தில்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி, குரங்கணி தடுப்பணைகளில் கலெக்டர் செந்தில்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கலெக்டர் ஆய்வு
வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை முறையாக பெய்யாத காரணத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆழ்வார்திருநகரி, குரங்கணி உள்ளிட்ட தடுப்பணைகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, குடிநீர் வடிகால் வாரியம், வருவாய்த்துறை மற்றும் நீர்வளத் துறையினரோடு ஆலோசனையில் ஈடுபட்டு, குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் விரைந்து செய்யும்படி உத்தரவிட்டார்.
முத்துமாலை அம்மன் கோவில்
அதனை தொடர்ந்து குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் வளாகத்தில் ரூ.70 ஆயிரம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள மகளிர் சுகாதார வளாகம், மணத்தியில் ரூ.27.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டிடம், குரும்பூரில் ரூ.6.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் வேளாண் இடுபொருட்கள் சேமிப்பு கிடங்கு கட்டிடம், கிழக்கு அழகப்பபுரத்தில் ரூ.9.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையை கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், செயற்பொறியாளர் (தாமிரபரணி வடிநிலக் கோட்டம்) மாரியப்பன், திருச்செந்தூர் நகராட்சி ஆணையாளர் கண்மணி, உதவி செயற்பொறியாளர்கள் ஆதிமூலம், குமார், ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
அத்திமரப்பட்டி
இதைத்ெதாடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று அத்திமரபட்டி பகுதி விவசாயிகளுடன் சென்று அத்திமரப்பட்டி பகுதியில் உள்ள குளத்தை பார்வையிட்டார். அதாவது, தாமிரபரணி வடிநிலக் கோட்டத்தின் மூலம் கோரம்பள்ளம் கண்மாயில் 6,150 மீட்டர் நீளத்திற்கு கரையை பலப்படுத்துதல், 1,400 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் சிமெண்டு சாலை அமைத்தல், புதிதாக மடை அமைத்தல், கண்மாயின் உட்புறத்தில் தூர்வாரும் பணி மேற்கொள்ளுதல் என மொத்தம் ரூ.12 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது, விவசாயிகளின் ஆலோசனைப்படி, நாளை (திங்கட்கிழமை) முதல் கூடுதலான லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் கோரம்பள்ளம் குளத்தை தூர் வாரவும், அந்த மண்ணை, நல்லமலைைய ஒட்டியுள்ள குளத்தின் மேற்கு எல்லையில் வெள்ளம் ஏறாத பகுதிக்கு கொண்டு சென்று குவித்து வைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது, தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன், முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்க தலைவர் என்.வி.பூபதி, செயலாளர் எஸ்.ரகுபதி, துணைத் தலைவர் என்.திருமால், ஒருங்கிணைப்பாளர் ரா.ஜோதிமணி, ஆட்சி மண்டல உறுப்பினர் தி.தானியேல், முள்ளக்காடு ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாத் நிர்மல், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.