கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்டப்பணி ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்டப்பணி ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கடந்த 2011-ம் ஆண்டு பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளர்களை மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வேலை உறுதி திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இத்திட்டப்பணி ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய மாதம் ரூ.7,500 தொகுப்பூதியம் வழங்கப்படவுள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள், தற்போது இந்த பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப கடிதம் மற்றும் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்ப்பித்து பணியில் சேரலாம்.
குறிப்பாக ஏற்கனவே பணியாற்றியவர்கள் தங்களது ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடர்பு கொண்டு ஏற்கனவே பணியாற்றிய விவரத்துடன் தற்போது வழங்கப்படவுள்ள பணியில் சேர விருப்பம் உள்ளதற்கான விண்ணப்பத்தையும், விருப்பக் கடிதத்தையும் பூர்த்தி செய்து வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) வருகிற 18-ந்தேதிக்குள் வழங்க வேண்டும். அவ்வாறு பணியில் சேர விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 1- 7-2022-ந்தேதி முதல் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.