விசைப்படகுகளில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு சாதனங்கள் குறித்து கேட்டறிந்தார்.
குளச்சல்:
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு சாதனங்கள் குறித்து கேட்டறிந்தார்.
மீன்பிடி துறைமுகம்
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். தற்போது குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகுகளுக்கு கடந்த 1-ந்் தேதி முதல் 61 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கரை திரும்பிய அனைத்து விசைப்படகுகள் கடந்த 13 நாட்களாக துறைமுகங்களில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.
தற்போது மீனவர்கள் தங்கள் படகுகளில் பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர். ேமலும், இந்த தடைக்காலத்தில் மீன் வளத்துறை அதிகாரிகள் விசைப்படகுகளை ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி தற்போது துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை மீன்வளத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
விசைப்படகுகளில் கலெக்டர் ஆய்வு
இந்தநிலையில் நேற்று காலையில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் வந்தார். அவர் அங்கு நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை ஆய்வு செய்தார். அப்போது விசைப்படகில் ஏறி அதன் நீளம், என்ஜின் தன்மை, பாதுகாப்பு கருவிகள், தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவை குறித்து மீன் வளத்துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியனிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது உடன் மீன்வளத்துறை உதவி இயக்குனர் புஷ்ராசப்னம், ஆய்வாளர் சிவகுமார், குளச்சல் விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்க பொருளாளர் அந்திரியாஸ் மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.