நகராட்சி மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தாா்.
நெல்லிக்குப்பம்:
நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆனால் மாலை நேரத்துக்கு பிறகு இங்கு டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை என்றும் செவிலியர்கள சிகிச்சை அளித்து வருவதாகவும், பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த வருகை பதிவேட்டை ஆய்வு செய்த அவர் சிகிச்சைக்கு வந்தவர்களிடம் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? மருந்து மாத்திரை வழங்கப்படுகிறதா? டாக்டர்கள் பணிக்கு வருகிறார்களா? என்று கேட்டறிந்து மருந்து மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு உள்ளதா? என்பதை ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி மருத்துவமனையில் கழிவறை வசதி இல்லை என சமூக ஆர்வலர் குமரவேல் புகார் தெரிவித்தார். இதையடுத்து கழிப்பறை அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது அவரிடம் அங்கு நின்ற பெரிய மரத்தை வெட்டினால் அந்த பகுதியில் கழிப்பறை கட்டலாம் என மருத்துவத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதற்கு, மரத்தை வெட்டாமல் இருக்கிற இடத்தில் கழிப்பறை கட்ட வேண்டும் என கூறிய அவர் உடனடியாக நகராட்சி ஆணையர்(பொறுப்பு) மகேஸ்வரியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு உடனடியாக கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.