அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தொண்டி,
திருவாடானை யூனியன் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம் பொதுமக்கள் சிலர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுவை பெற்ற கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின்னர் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்றார். அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது சத்துணவு அமைப்பாளர், சமையலரிடம் அரிசியை நன்கு கழுவிய பின்னர் உணவு சமைக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு நல்ல முறையில் உணவு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பின்னர் உணவுக்கான அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு சென்று பதிவேடுகளின் அடிப்படையில் உணவு பொருட்களின் இருப்பை ஆய்வு செய்தார். மேலும் அவர் அப்பள்ளிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் சுற்றுச்சுவர் உடனடியாக கட்டுவதற்கும், கூடுதல் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கும் அவர் உத்தரவிட்டார். மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆய்வின் போது ராமநாதபுரம் பயிற்சி கலெக்டர் சிவானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் மலைராஜன், ஒன்றிய பொறியாளர் செல்வகுமார், வட்டார கல்வி அலுவலர் புல்லாணி, பள்ளி தலைமை ஆசிரியர் அருள்சாமி, சத்துணவு அமைப்பாளர் கிருஷ்ணம்மாள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.