ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
சீர்காழி தென்பாதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
சீர்காழி:
சீர்காழி தென்பாதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
சீர்காழி தென்பாதி திருவேங்கடம் பிள்ளை பூங்காவில் தற்காலிகமாக நகர ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது நோயாளிகள் நகர சுகாதார நிலையத்தில் கூடுதலாக கழிப்பிட வசதி, குடிநீர் வசதி செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில் கலந்துகொண்ட கலெக்டர், மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பயனாளி ஒருவருக்கு மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டையை வழங்கினார்.
ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி
அதனை தொடர்ந்து வைத்தீஸ்வரன் கோவில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணவர்களின் கல்வி திறன் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த மதிய உணவு மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் அர்ச்சனா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) பாபு, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், அரசு மருத்துவர் அறிவழகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.