சின்ன கெங்கநல்லூர் ஏரியில் கலெக்டர் ஆய்வு
மண் கடத்துவதாக வந்த புகாரின்பேரில் சின்னகெங்கநல்லூர் ஏரியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன கெங்கநல்லூர் ஏரியில் இருந்து மண் கடத்தப்படுவதாகவும், அதைதடுக்க வேண்டும் எனவும் கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடந்த மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மனு கொடுத்தார்.
இந்த நிலையில் நேற்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்டோர் சின்ன கெங்கநல்லூர் ஏரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏரியின் அகலம், மண் எடுத்த ஆழம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி, துணை தாசில்தார்கள் ராமலிங்கம், குமார், சுதா, வருவாய் ஆய்வாளர் ரேவதி, கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
வீடு கேட்டு கோரிக்கை
முன்னதாக கலெக்டர் வருவதை அறிந்த பட்டியல் இன மக்கள் திரண்டு வந்து கலெக்டரின் காரை நிறுத்தினர். அவர்களிடம், கலெக்டர் ஆய்வு பணிக்கு செல்வதாகவும், வரும்போது உங்களை சந்திக்கிறேன் என கூறிவிட்டு சென்றார். அதன்படி திரும்பி வரும்போது சாலை நின்றவர்களிடம் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அவர்கள் இந்த ஆண்டு கெங்கநல்லூர் ஊராட்சிக்கு பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் 113 நபருக்கு வீடு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பட்டியல் இனத்தவருக்கு வந்த வீடுகளை வேறு நபர்களுக்கு கொடுத்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த கலெக்டர் உங்களுக்கு எத்தனை வீடுகள் வேண்டும் என கேள்வி எழுப்பினர். அதற்கு 79 வீடுகள் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடனே 79 பேருக்கும் வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்குவதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.