அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு


அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர்

மந்தாரக்குப்பம்:

மந்தாரக்குப்பம் அருகே உள்ள பெரியாக்குறிச்சி, கங்கைகொண்டான் மற்றும் வடக்குவெள்ளூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். இதில் பிரசவ வார்டு உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சென்று அங்கிருந்த நோயாளிகளிடம் குறைளை கேட்டறிந்தார். அப்போது கங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் பணிபுரிய டாக்டர்கள் நியமனம் செய்யப்படவில்லை.

இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் அங்கு சிகிச்சை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் அவர்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க இரவு நேரத்தில் பணிபுரிய டாக்டர்களை நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை கேட்டறிந்த கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது டாக்டர்கள் சசிகலா, லாவண்யா, அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் அருண்ராஜ், கங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சிவதங்கம், கம்மாபுரம் சுகாதார மேற்பார்வையாளர் பாண்டியராஜன், கங்கைகொண்டான் பேரூராட்சி மன்ற தலைவர் பரிதா அப்பாஸ், ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி ராதாகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மின்சார வசதி

இந்த ஆய்வின் போது பெரியாக்குறிச்சி நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக பெரியாக்குறிச்சியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. மேலும் மின்சார வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் நாங்கள் பெரும் சிரமம் அடைந்து வருகிறோம். இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து கலெக்டர் பாலசுப்பிரமணியம், நரிக்குறவ சமுதாய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மேலும் மின்வசதியும் செய்து கொடுக்க வேண்டும் என அங்கிருந்த விருத்தாசலம் தாசில்தார் சிவக்குமாருக்கு உத்தரவிட்டார்.


Next Story