நவ்லாக் ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு


நவ்லாக் ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு
x

நவ்லாக் ஊராட்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன்் ஆய்வு செய்தார். அப்போது மாணவ- மாணவிகளின் ஆங்கில வாசிப்புத்திறனை கேட்டறிந்தார்.

ராணிப்பேட்டை

நவ்லாக் ஊராட்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன்் ஆய்வு செய்தார். அப்போது மாணவ- மாணவிகளின் ஆங்கில வாசிப்புத்திறனை கேட்டறிந்தார்.

கலெக்டர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் நவ்லாக் ஊராட்சியில் அங்கன்வாடி, நூலகம் உள்ளிட்ட இடங்களில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம், நவ்லாக் ஊராட்சி புளியங்கண்ணு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் சமையல் கூடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் புளியங்கண்ணு கிராமத்தில் உள்ள பழைய நூலக கட்டிடம் பழுதடைந்துள்ளதை பார்வையிட்டு, அக்கட்டிடத்தை அகற்றி விட்டு புதியக் கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க ஊராட்சி தலைவரை கேட்டுக்கொண்டார்.

பின்னர் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து தேவையான வசதிகள் மற்றும் குறைபாடுகளை கேட்டறிந்தார். அப்போது மருத்துவர்கள் பற்றாக்குறைவு உள்ளது என அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள். தொடர்ந்து ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வெளி நோயாளிகள் பிரிவு கட்டிடப் பணிகளை பார்வையிட்டார். கட்டிடத்தில் மழை தண்ணீர் தேங்காத வண்ணம் மேற்கூரைகள் அமைக்க உத்தரவிட்டார்.

வாசிப்புத்திறன்

தொடர்ந்து அருகில் இருந்த கால்நடை மருந்தகத்தினை பார்வையிட்டு, 25 ஆண்டுகள் ஆன கட்டிடத்தை அகற்றிட கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து வழங்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் அங்கு கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், பதிவேடுகள், மருந்துகள் இருப்பு ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

புளியங்கண்ணு அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைக்கால நோய் பரவுவதை தடுக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நிலவேம்பு கசாயத்தினை மாணவ- மாணவிகளுக்கு வழங்கினார். பின்னர் 9-ம் வகுப்பு மாணவ- மாணவியர்களின் ஆங்கில வாசிப்புத் திறனை கேட்டறிந்தார். திருக்குறள் மற்றும் ஆங்கில வார்த்தைக்கு பொருள் தெரிகின்றதா என சோதித்துப் பார்த்து, மாணவ-மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

ஆய்வின் போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட், ஊராட்சி மன்றத் தலைவர் சரஸ்வதி குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story