கரும்பு தோட்டங்களில் கலெக்டர் ஆய்வு


கரும்பு தோட்டங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பு வழங்கப்பட உள்ளதையொட்டி கரும்பு தோட்டங்களில் கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொள்முதல் செய்யப்படக்கூடிய கரும்புகள் 6 அடிக்கு குறையாமலும், தரமானதாகவும் இருக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பு சேர்த்து வழங்கப்பட உள்ளது.இதையொட்டி விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் பிடாகம், குச்சிப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கரும்பு தோட்டத்தை நேற்று மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தை பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழுநீள கரும்புடன் ரூ.1,000 ரொக்கமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் 6,15,020 குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் முகாம்களில் வசிக்கும் 434 பேர் என மொத்தம் 6,15,454 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

6 லட்சம் கரும்புகள் கொள்முதல்

இதற்காக சுமார் 6 லட்சம் செங்கரும்புகள் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் ஏறத்தாழ 125 ஏக்கர் நிலங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. அதில் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 25 லட்சம் கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள கரும்புகளை பிற மாவட்டத்திற்கு விற்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். கொள்முதல் செய்யப்படும் கரும்பு 6 அடிக்கு குறையாமலும், தரமானதாகவும் இருக்க வேண்டும். ஒரு கரும்பின் விலை ரூ.33-க்குள் கொள்முதல் செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தற்போது பிடாகம், குச்சிப்பாளையம் பகுதியில் கரும்பு தோட்டத்தில் உள்ள கரும்பின் தரம் மற்றும் உயரம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி, துணை இயக்குனர் செல்வபாண்டியன், உதவி இயக்குனர்கள் சரவணன், வேல், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வெங்கடேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story