மலை கிராமத்திற்கு சாலைஅமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு
அப்புக்கல் ஊராட்சியில் மலை கிராமத்திற்கு சாலை அமைப்பது குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அப்புக்கல் ஊராட்சியில் உள்ள அப்புக்கல், பண்ணையாரை திப்பை, மானியக்கொல்லை, யாதவபுரம் மற்றும் ஏரிக்கொல்லை ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று காலை ஆய்வு செய்தார்.
அப்போது அப்புக்கல் ஊராட்சியில் உள்ள பணியாரதிப்பை மலை கிராமத்திற்கு சாலை அமைப்பது குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து மானிய கொல்லை, அப்புக்கல் கிராமங்களுக்கு இடையே சாலை வசதி வேண்டி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சாலை அமைப்பது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
தூய்மையாக பராமரிக்க வேண்டும்
பின்னர் அப்புக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட யாதவபுரம் பகுதியில் ஆய்வு செய்த கலெக்டர் சாலை ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள திடக்கழிவுகளை அகற்றி கிராமத்தை தூய்மையாக பராமரிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோரை அறிவுறுத்தினார். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் மகளிரிடம் பணி குறித்தும், பணிக்கான ஊதியம் சரியான முறையில் வழங்கப்படுகிறதா எனவும் கேட்டு அறிந்தார்.
ஏரிக்கொல்லை கிராமத்தில் இருந்து அணைக்கட்டு வரையிலான பகுதியில் மாணவ-மாணவிகள் பள்ளி செல்லும் நேரத்திற்கு பஸ் வசதி வேண்டி பொதுமக்கள் அளித்த கோரிக்கைகளை உடனடியாக பரிசீலிப்பதாகவும், இது குறித்து ஏற்கனவே அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளதாகவும் கலெக்டர்தெரிவித்தார்.
சிற்பக்கலைகள்
இந்தப்பகுதியில் பழங்கால சிற்ப கலைகள் இருப்பதாக மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தினிடம் தகவல் தெரிவித்து அவர்கள் ஆய்வு செய்த பிறகு இந்த பகுதியில் பழங்கால சிற்பக் கலைகள் உள்ளதா என்பது தெரிய வரும் என கலெக்டர்கூறினார்.
ஆய்வின் போது அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன், வருவாய் ஆய்வாளர்கள் ரேவதி, விநாயக மூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.