தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு
திருவள்ளூர் வட்டம் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் உள்ள வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு பாதுகாப்பாக உள்ளதா? என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர்,
பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளனவா என்பது குறித்த ஆய்வு பள்ளி விடுமுறை காலங்களில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார்பள்ளி வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி முதல் கட்டமாக திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து எல்லைக்குட்பட்ட 70 வாகனங்கள் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக மைதானத்தில் நேற்று ஆய்வு நடைப்பெற்றது.
கலெக்டர் ஆய்வு
இதில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹரிக்குமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) கிரிராஜன், மாவட்ட தீயணைப்பு துணை அலுவலர் வின்சென்ட் ராஜ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, மோட்டார் வாகன ஆய்வாளர் (பொறுப்பு) சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி வாகனங்களின் முதலுதவிப் பெட்டி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துதல், அவசரகாலக் கதவு, ஜன்னல்கள், தீயணைப்புக் கருவிகள், புத்தகப்பை வைக்கும் அடுக்கு உள்பட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
மேலும் இந்த ஆய்வுப் பணி வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் என்றும், பள்ளி திறக்கப்பட்டதும், அனுமதியின்றி இயங்கும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.