அரசு நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
சீர்காழி ஒன்றிய பகுதிகளில் அரசு நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
சீர்காழி:
சீர்காழி ஒன்றிய பகுதிகளில் அரசு நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
மக்களை தேடி மருத்துவம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியம் நிம்மேலி ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார். அப்போது சுகாதாரத் துறையினர் முறையாக நேரில் வந்து ஆய்வு செய்து மருந்துகள் வழங்கப்படுகிறதா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கன்வாடி மையத்தில் மாணவர்களுக்கு வழங்க இருந்த கொழுக்கட்டை மற்றும் உணவினை ஆய்வு செய்தார்.
மேலும் வருகை பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கன்வாடி அமைப்பாளரிடம் ஜீரோ முதல் ஆறு வயது உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சத்து மாவு எவ்வாறு வழங்கப்படுகிறது என்று கேட்டறிந்தார்.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்
தொடர்ந்து கொண்டல் ஊராட்சிக்குட்பட்ட மேல தேனூர் கிராமத்தில் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது.கூட்டத்துக்கு சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல் ஜோதி தேவேந்திரன், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வீடு கட்டும் பயனாளிகள் பணியை விரைந்து முடிக்க வேண்டும், பயனாளிகளுக்கு தேவையான கம்பி, சிமெண்டு உள்ளிட்ட பொருட்களை அரசு சார்பில் தடை இன்றி வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் வசந்தி கிருபாநிதி, மதியழகன், விஜயன், அலெக்சாண்டர், பத்மா, என்ஜினீயர்கள் கலையரசன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சரவணன் நன்றி கூறினார். முன்னதாக நம்ம ஊரு சூப்பர் சுகாதார ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.