அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலெக்டர் ஆய்வு


அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Jun 2023 12:45 AM IST (Updated: 22 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிட்டங்கியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலெக்டர் ஆய்வு செய்தார்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்கும் கிட்டங்கி உள்ளது. இங்கு கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் வி.வி.பேட் கருவிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த கிட்டங்கி சீல் வைக்கப்பட்டு சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கிட்டங்கியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர்கள் முன்னிலையில் கிட்டங்கியில் வைக்கப்பட்டு இருந்த 'சீல்' அகற்றப்பட்டது. ஆய்வு முடிந்தபின்னர் மீண்டும் 'சீல்' வைக்கப்பட்டது. ஆய்வு குறித்து கலெக்டர் ஷஜீவனா கூறும்போது, 'இங்கு 2,885 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,574 கட்டுப்பாட்டு கருவிகள், 1,401 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவிகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. காலாண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது' என்றார். இந்த ஆய்வின்போது, தேர்தல் பிரிவு தாசில்தார் சுகந்தா, துணை தாசில்தார்கள் ராஜா, செந்தில்குமார் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story