தூசூர், வேட்டாம்பாடி ஏரிகளை கலெக்டர் உமா 'திடீர்' ஆய்வு
நாமக்கல் அருகே உள்ள தூசூர் மற்றும் வேட்டாம்பாடி ஏரிகளை கலெக்டர் உமா நேற்று திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டி ஏரி, வீசாணம் நீர்வரத்து கால்வாய், வேட்டாம்பாடி ஏரியின் நீர்பிடிப்பு மற்றும் நீர்வரத்து கால்வாய், சிதம்பரம்பட்டியில் நீர் வெளியேறும் பகுதி கலெக்டர் உமா நேற்று திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதேபோல் சிவியாம்பாளையம் ஊராட்சி லக்கநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கால்வாய், ரெட்டிப்பட்டி ஊராட்சி சாலப்பாளையம் கால்வாய் மற்றும் தூசூர் ஏரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அவர் ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வின் போது நீர்நிலைகளின் நீர் ஆதாரங்கள், நீர்வரத்து மற்றும் வெளியேறும் தண்ணீர், தூசூர் ஏரியின் மூலம் பயன்பெறும் பாசன பரப்பளவு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அலுவலர்களிடம் கலெக்டர் விரிவாக கேட்டறிந்தார். அப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நீர்நிலைகளில் பல்வேறு இடங்களில் நீரின் தன்மை குறித்து பரிசோதனை செய்திட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்
மேலும் நீர்வள ஆதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நாமக்கல் நகராட்சி ஆகிய துறைகளை சார்ந்த அலுவலர்கள் நீர்நிலைகளின் நீர்வரத்து குறித்த விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்கவும், வேளாண்மைத்துறை அலுவலர்கள் வேளாண் சார்ந்த விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தினார். முன்னதாக நாமக்கல் நகராட்சி மற்றும் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நீர்நிலைகளின் தற்போதைய நிலவரம் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது நாமக்கல் நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன், நகராட்சி பொறியாளர் சுகுமார், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுமித்ரா, தாசில்தார்கள் செந்தில், சக்திவேல், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சங்கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், பாஸ்கர் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.